கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

இரத்தினபுரி – பாம் கார்டன் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து பொதுமக்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இரத்தினபுரி – பாம் கார்ட்ன் தோட்ட சந்தியில் இருந்து இரத்தினபுரி நகரம் வரை பேரணியாகச் சென்ற மக்கள், இரத்தினபுரி பொலிஸ் நிலைய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்களுடன் பொலிஸார் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரத்தினபுரி – பாம் கார்டன் தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி மாலை 6 மணியளவில் நபரொருவரைத் தாக்கி, அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியொன்றை கொள்ளையடித்துள்ளதுடன், மற்றுமொரு நபரைக் கடத்திச்சென்று தாக்கிக் கொலை செய்துள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாம் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த 37 வயதான தனபால விஜேரத்னம் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் அதே தோட்டத்தைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

கொலை செய்யப்பட்டவரின் இறுதிக்கிரியைகள் நாளை (22) இடம்பெறவுள்ளன.

Sharing is caring!