கொள்கலன்கள் பரிசோதனை 3 நாள்களில் முடியும்-சுங்கம் தெரிவிப்பு
தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன்களைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 3 நாட்களுக்குள் நிறைவுசெய்யப்படும் என, சுங்க தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையினால் 6,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்கியுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுங்கப் பணிப்பாளர் நாயகத்தை இடமாற்றுவது குறித்த அமைச்சரவைத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 7 நாட்களாக சுங்க அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக புறக்கோட்டையில் உள்ள சகல மொத்த வியாபார நிலையங்களும் நேற்று மூடப்பட்டன.
இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸை எதிர்வரும் 3 மாதங்களுக்கு மீண்டும் சுங்கப் பணிப்பாளர் நாயமாக நியமிப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.