கொழும்பின் சில பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் கைது

கொழும்பின் சில பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான களுஹத் மதுஷான் ஆப்ரேவ் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய – கோதமி வீதிப்பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஜம்பட்டா வீதியில் இளம் தம்பதியினரை கொலை செய்தமை, ஆகஸ்ட் மாதம் முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றின் பிரதான சந்தேகநபரே இவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர் கொலைகளுக்குப் பயன்படுத்திய துப்பாக்கியைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர் கடற்படையிலிருந்து தப்பிச்சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடமிருந்த ஒரு கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!