கோட்டபாய இனி வெளிநாடு செல்லலாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு சென்று வர கொழும்பு – மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தற்போது நீதிமன்ற பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டையும் தற்காலிகமாக அவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ வௌிநாட்டிற்கு செல்லும் காலப்பகுதியில், மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, அவர் சார்பில் சட்டத்தரணி ஆஜராவதற்கான சத்தியக் கடதாசியை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெதமுல்ல டீ.ஏ ராஜபக்ஸ நூதனசாலையை நிர்மாணிப்பதற்கு 339 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான இந்த வழக்கில், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு எதிராக இன்று அடிப்படை ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவியல் வழக்கு நடைமுறைக்கு முரணாக அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கின் இரண்டாம், ஆறாம் மற்றும் ஏழாம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய செயற்படாது, முறையற்ற விதத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பின் , குறித்த குற்றப்பத்திரிகை தவறாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு உத்தரவிட முடியும் எனவும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனை தொடர்பில் சட்ட மா அதிபரின் பதிலை எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்த நீதிமன்றம், அன்று வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Sharing is caring!