சகோதரர் சண்டை உயிர் பலி

பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவர் மரணமடைந்தார்.

வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை, பின்னர் சண்டையாக மாறிய போது, இளைய சகோதனை மூத்த சகோதரன் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

இதன்போதே, இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது;

பொத்துவில் -அறுகம்பை பிரதான வீதியிலுள்ள ‘கிறீன் றூம் ரெஸ்டூரன்ட்’ உணவகத்தை நடத்தும் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே உயிர்ப்பலியில் முடிந்துள்ளது.

உயிரிழந்தவர் சந்தேக நபரின் இளைய சகோதரரான முஹம்மது இப்றாஹீம் முஹம்மது ஜெலீல் (வயது 24) என்பவராவார்.

அறுகம்பை பிரதேசம் உல்லாச சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற இடமாக விளங்குவதால், குறித்த உணவகம் உல்லாசப் பயணிகளின் வருகைக்காலத்தில் பெறுமதி மிகுந்த வியாபாரத் தளமாக விளங்கும்.

இதனால் குறித்த இடத்தினை தனக்கு வழங்கவேண்டுமென சந்தேக நபர் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனையில் ஈடுபடுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;“உயிரிழந்தவரின் சகோதரியின் பெயரிலுள்ள குறித்த சொத்தினை அவர் தனது இரண்டு மகள்களுக்கும் எழுதிவைத்துள்ளார். இந்த நிலையில், சந்தேக நபரான முஹம்மது இப்றாஹீம் முஹம்மது சலீம்(29) சொத்து விடயமாக அடிக்கடி பிரச்சினைப்படுவதாகவும், அவ்வாறே இன்றும் மதுபோதையில் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த சகோதரர் அவ்விடத்திற்குவந்து எங்களை வீடுகளுக்குள் செல்லுமாறும் யாரும் வெளியில் வரக்கூடாதென்றும் கூறிவிட்டு பிரதான வீதிப்பக்கமாக சென்றார்.

பின்னர் சற்றுநேரத்தில் கூக்குரலிட்டுக்கொண்டு ஓடிவந்தார். சத்தம்கேட்டு வீடுகளுக்குள்ளிருந்த நாங்கள் வெளியில் வந்துபார்த்தபோது, இளைய சகோதரர் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராகக் கிடந்தார்” என்றார்.

திருமணமாகி விவாகரத்தான மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய சந்தேக நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

Sharing is caring!