சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது

எவ்வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது, ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு மற்றும் மக்களுக்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்காக ஜனாதிபதி என்ற வகையிலும், தனிப்பட்ட ரீதியிலும் தாம் முன் நிற்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புகளை நிறைவேற்றுமாறு அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரச வளங்களை வீணடித்து, மக்களின் பணத்தை கொள்ளையடித்து முன்னெடுக்கப்படும் ஊழல் மோசடிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மூடி மறைக்கப்படாது எனவும், ஓர் நாளில் அவையனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படும் எனவும் குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

Sharing is caring!