சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இரத்தினபுரி வளாகம் கையளிக்கப்பட்டது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இரத்தினபுரி வளாகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மருத்து பீடத்திற்குள் நுழைவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை.

பெலிஹூல்ஓயவிலுள்ள சப்ரகமுவ பக்கலைக்கழகத்திலிருந்து இரத்தினபுரி வளாகத்திலுள்ள மருத்துவ பீடத்திற்கு மாணவர்கள் பஸ்களில் செல்வதற்கு முயன்றனர்.

ஓபநாயக்க பகுதியில் பஸ்ஸை நிறுத்திய பொலிஸார் மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியால பரிசோதனையின் பின்னரே மாணவர்கள் மீண்டும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் பட்டுஹென சந்தியில் மருத்துவ பீட வளாகத்திற்குள் நுழையும் பகுதியில் பொலிஸார் வீதித்தடையை ஏற்படுத்தினர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

மருத்துவ பீடத்தை திறந்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை தொடர்பில் மாணவர்கள் அதிருப்தி வௌியிட்டனர்.

மாணவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் மருத்துவ பீட கட்டடத் தொகுதியை பிரதமர் திறந்து வைத்தார்.

மருத்துவப் பீடத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்ததற்கான பத்திரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உப பீடாதிபதி பேராசிரியர் சுனில் ஷாந்தவிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் நிகழ்வை முன்னிட்டு, இரத்தினபுரி தள வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.

Sharing is caring!