சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று (26) நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் வாழ்க்கை செலவு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டரின்விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 1,538 ரூபாவாக காணப்பட்ட, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,733 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, சிற்றுண்டிசாலைகளில் உணவுகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (27) காலை முதல் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், மாதாந்தம் சுமார் 6,000 ரூபாவிற்கு மேல், மேலதிக செலவு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த நஷ்டத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்ற காரணத்தால், சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பால்தேநீர், அப்பம், பிட்டு, ரொட்டி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இன்று அதிகாலை முதல் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், பொருட்கள் மற்றும் சேவைக்கட்டணங்கள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்டன.

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 4 வீதத்தால் அதிகரிக்கப்பட்டன.

எரிபொருள் விலை அதிகரித்தமையால், பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணங்களும் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ரயில் கட்டணங்களை 15 வீதத்தால் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!