சம்பள அதிகரிப்பு…பேச்சு வார்த்தை தோல்வி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பெருதோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க , தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீர, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை – நல்லதண்ணி தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் கோஷங்களை எழுப்பியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி கொடுப்பனவை மீண்டும் வழங்குமாறு வலியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஹட்டன் – டயகம பிரதான வீதியை மறித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போர்டைஸ் தோட்டத் தொழிலாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, தமக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Sharing is caring!