சம்பள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிப்பது முக்கியம்

அரசுகள் வரலாம், போகலாம். அதுவல்ல நமக்கு முக்கியம். பெருந்தோட்ட சமூகத்தின் நல்எதிர்காலமும் சம்பள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வைப்பதும் தான் எமக்கு இப்போது முக்கியம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

பெருந்தோட்ட கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சராக

பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் வடிவேல் சுரேஷிடம், அரசில் அங்கம் வகிக்க எடுத்த முடிவு பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

“வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் இன்றைய சூழலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வாங்கித்தர வேண்டிய அவசியம் உள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமரிடம் சம்பள விடயமாகப் பேசியிருக்கிறார். தொழிற்சங்கத் தரப்பினர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கூட்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்படுவதில் காணப்படும் பிரச்சினைகள் அடுத்துவரும் தினங்களில் தீர்க்கப்பட்டுவிடும். எமது கோரிக்கை வெற்றிபெறும். நான் ஐ. தே. க. உயர் மட்டத்திலும் முன்னாள் பிரதமரிடமும் இது பற்றி விரிவாக பேசியிருக்கிறேன். கெஞ்சிக் கேட்டேன், ரணில் விக்கிரமசிங்க சம்பள விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை” என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

சம்பள விவகாரத்தை மேலும் இழுத்தடிக்க முடியாது என்றும், குறுகிய காலத்துக்குள் ஒரு முடிவைக் காண வேண்டியிருப்பதாலும் புதிய அரசு அதற்குத் தளமாக இருப்பதாலும் நான் அரசுடன் இணைய முன்வந்தேன். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்கள் முன்பாக கூட்டு உடன்படிக்கை தொடர்பாக தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தால், அது எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்றும் அது முதலாளிமார் தரப்புக்கு அழுத்தம் தந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சௌமிய மூர்த்தி தொண்டமானின் 19வது சிரார்த்த தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட போது மறைந்த தலைவரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த வடிவேல் சுரேஷ், பின்னர் இ. தொ. கா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஐ. தே. கவுடனான தொடர்பு பற்றி அவரிடம் வினவியபோது, நுவரெலியா மாவட்டம் ஐ. தே. க. ஆதரவாளர்கள் நிறைந்த பகுதி எனப் பரவலாக அறியப்பட்டு இருந்தாலும், அங்கிருந்து பாராளுமன்றத்துக்கு எத்தனை ஐ. தே. க. உறுப்பினர்கள் தெரிவாகி வருகிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் தமிழ் எம். பி. மார்? என்ற கேள்வியையே பதிலாகத் திருப்பிக் கேட்ட அவர், இதுதான் உண்மை நிலை என்றார்.

தொழிலாளர் சம்பள விவகாரம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஆக உயர்ந்த நிலையில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எதைத் தீர்மானிக்கிறாரோ அதுவே நடக்கும் என்றார்.

Sharing is caring!