சர்வதேச அமைப்புக்கள் உன்னிப்பான கவனிப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சபாநாயகருடன் கலந்துரையாடி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு தமது அரசாங்கத்தின் தலைவர் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறும் இரு தரப்பினரிடமும் கோருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹெதர் நோவட் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைவாழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஜனநாயக விழுமியத்தின் அடிப்படை அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறும் ஒற்றுமையாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவாக்கத்தை பாதுகாத்து தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலமைப்பிற்கமைய தீர்த்துக்கொள்வதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நில நாட்களாக இடம்பெற்றுவரும் விடயங்களை அவதானித்து வருவதாகவும் ஜனநாயம் மற்றும் சட்டத்தை பாதுகாப்பது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும் வன்முறைகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பான பொறுப்புக்கூறல் தண்டனையிலிருந்து விடுபடுதலை நிறுத்துதல் உள்ளிட்ட சர்வதேச கோட்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பிலான அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கு வலிமையான நடவடிக்கை எடுக்குமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

Sharing is caring!