சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு

வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு

வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பலர் எம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள்.

அவ்வாறு சாதித்து, சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.

ஆறு நாடுகள் பங்கேற்கும் 15 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் பூட்டானில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான இலங்கை அணிக்கு வட மாகாணத்திலிருந்து ஜெகநாதன் ஜெதுன்ஷியா, சிவசுதன் தவப்பிரியா, உருத்திரகுமார் யோகிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அளவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுன்ஷியாவின் தந்தை அன்றாட கூலித்தொழிலின் மூலம் தன் குடும்பத்தைக் கவனித்து வருகின்றார்.

வலிகாமம் வடக்கு – கொல்லங்கட்டியில் வசிக்கும் சிவசுதன் தவப்பிரியாவின் தந்தை விவசாயி என்பதுடன், வறுமைக்கு மத்தியிலேயே இவர் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றார்.

வலிகாமம் வடக்கு – அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த யோகிதாவின் தந்தை உருத்திரகுமார் உடற்பலவீனம், சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், உறவினர்களின் உதவியில் தங்கியுள்ளார்.

வறுமை பின்தொடர்ந்தாலும் கால்பந்தாட்ட அரங்கில் சாதிக்க வேண்டும் என்பதே இந்த மூன்று வீராங்கனைகளினதும் இலட்சியக் கனவாகும்.

Sharing is caring!