சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள பலாலி
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பரந்தனில் ஐஸ் சேமிப்பு நிலையங்களையும் ஐஸ் ஆலையையும் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.