சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு மற்றுமொரு அறிவித்தல்!

சவுதியிலுள்ள இலங்கையர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் நேற்றுமுன் தினம் சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில்,

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சவுதி அரேபியாவில் வாழுகின்ற இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், உங்கள் கடவுச்சீட்டை எந்த சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்கும் படியும் இலங்கைத் தூதுவராலயம் ஆலோசனை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த அறிவித்தல் குறித்து விளக்கமளிக்கும் மற்றுமொரு அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது அதில்,

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி எமது தூதுவராலயத்தினால் வெளியிடப்பட்ட “முக்கிய அறிவித்தல்” தொடர்பாக எமது தூதுவராலயம் கீழ்வரும் தெளிவுறுத்தலை மேற்கொள்கிறது.

இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழ்கின்ற இலங்கையர்கள் அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பொதுவானதொரு அறிவித்தலாகும்.

இத்தூதுவராயத்தால் விடுக்கப்பட்ட இந்த அறிவிப்பின் பிரதான நோக்கம் சவுதியிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் எந்தவொரு அவசர நிலைமைக்கும் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவேயாகும்.

இது பயப்படுவதற்கான ஒரு நிலைமையல்ல. மேலும் சவுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் அவதானத்துடனும், கவனத்துடனும் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுமாறு எமது தூதுவராலயம் அறிவுறுத்துகிறது.

இலங்கையைச் சேர்ந்த யாருக்கும் மேலதிக தகவல்கள் தேவைப்படுமாயின் கீழ்வரும் இலக்கங்களுடனோ அல்லது மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளவும்.

4608232
4608235
[email protected] என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!