சிங்கள் குடியேற்றம் உடன் நிறுத்த வேண்டும்…சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசு வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியில் L வலயம் என்ற பெயரில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்தை மிகத்தீவிரமாக மேற்கொண்டு வருவது கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்று அரசாங்கம் கூறிவருகின்ற போதும், அவ்வாறு குடியேற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

L வலயத்தில் ஒரு ஏக்கர் காணி கொடுக்கப்பட்டதற்கான அத்தாட்சி தற்போது தம் கைவசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1957ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்திலும், 1965 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்யும் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கு மேலும் குடியேற்றவாசிகள் தேவைப்படும் இடத்து அந்தந்த மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு மேலும் குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் விடயம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது மாகாண சபையின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் தமக்குத் தெரியாத வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி நீர் எமக்கு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றியும் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வட, கிழக்கு மாகாணங்களில் முடிவுக்கு கொண்டு வருவதா, இல்லையா என்பது பற்றியும் மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்ற தமிழ் மக்களின் உறவைத் துண்டித்து வடக்கு வேறு, கிழக்கு வேறு என்று பிரித்தாளும் தந்திரத்தின் உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசு மேற்கொள்கின்றது என கருதுவதாகவும்,
இத்திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!