சிறுமி கொலை தொடர்பில் ஒருவர் கைது

யாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து சிவனேஸ்வரன் ரெஜினா என்ற 6 வயது சிறுமி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதன் தெரிவித்தார்.

சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் நீரில் மூழ்கியதால் மரணம் சம்பவிக்கவில்லையென சட்ட வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

சிறுமியின் சடலம் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sharing is caring!