சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 63 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
நாட்டிலுள்ள மூன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 63 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பேர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் 23 ஆவது நாளாகவும் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி 8 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, அரசியல் கட்சி மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பொதுமக்களுக்கு தௌிவூட்டுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைப்பான தேசத்தின் வேர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த உண்ணாவிரதப் போராட்டம், காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.