சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ரெலோ அமைப்பின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி ரூபா செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளமை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன், நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.
மான வழக்கு தொடுப்பது குறித்து எனது வசட்டத்தரணிகளோடு கலந்துரையாடி வருகின்றேன். அவரிடம் 150 கோடி ரூபா மானஇழப்புக் கோரத் தீர்மானித்துள்ளோம். அவரிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்கட்டும்.
உரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம். இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்சவிடமோ, ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது – என்றார்.