சி.வி. விக்னேஷ்வரன் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய செயற்படாது, நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு பதவியிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியமையை தடை செய்து கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!