சி.வி. விக்னேஸ்வரனிற்கு, தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு

புதிய தலைமையை உருவாக்குவதற்கு, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிற்கு, தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்து செல்வதாகவும் அதற்குத் தீர்வு ஏற்படுவதாக தெரியவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையே இந்த நிலை ஏற்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய குழுக்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தொடங்கியவரை ஒற்றுமை நீடித்ததாக வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் நிலவிய, நீண்டகால யுத்தம் காரணமாக பல்வேறு இழப்புக்கள் மற்றும் அரசியல் ரீதியான சவால்களிற்கு மத்தியில் தொடர்ந்து பயணிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சிலர் தொடர்ச்சியாக செய்துவருவதுபோல சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் இனத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை தான் அறிவதாகவும் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து அனைத்து வட்டாரங்கள் மற்றும் தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சி.வி. விக்னேஸ்வரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளதாகவும் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தனது அறிக்கையூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!