சுங்கம் பணிபகிஸ்கரிப்பு….பதில் பணிப்பாளர் சுமனசிங்க நியமனம்

பதில் சுங்க பணிப்பாளர் நாயகமாக நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் H.G.சுமனசிங்க இன்று மாலை நியமிக்கப்பட்டார்.

சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற பின்புலத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் H.S. சமரதுங்கவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டது.

ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை கடந்த 29 ஆம் திகதி அனுமதி வழங்கியதை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் , விமான பொதி சேவை மற்றும் ஏற்றுமதி சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளில் இருந்தும் விலகுவதற்கு சுங்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படும் போது, அந்த பதவியை வகித்த P.S.M. சார்ள்ஸை நிதி அமைச்சின் வருமான கண்காணிப்பு பிரிவிற்கு மாற்றுவதற்கும் அமைச்சரவைப் பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் இணைக்கும் வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அலுவலக சுங்க அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் , விமான பொதி சேவை மற்றும் ஏற்றுமதி சேவை ஆகியன முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் விபுல மினுன்பிட்டிய கூறினார்.

அரச சட்டங்களுக்கு அமைய அரச நிர்வாக சேவை அல்லது இலங்கை சுங்க சேவையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்த பதவியை வகிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!