சுற்றுலாத்துறை வளர்ச்சி மிகவும் மந்தகதியில்

வட பகுதியின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையாமைக்கு நீண்டகால யுத்தத்தை காரணம் காட்டுகின்ற போதிலும், யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி மிகவும் மந்தகதியில் நகர்வதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் அதிகமான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் பாராம்பரிய கலை-கலாசார விழுமியங்களும் காணப்படுவதாக சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை முறையாக வரிசைப்படுத்தி, வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடுத்துரைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர், பாரம்பரியத்தின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

வட பகுதியை சூழவுள்ள மணற்பாங்கான கடற்கரைகளையும் குடாநாட்டை சூழவுள்ள சப்த தீவுகளில் நெடுந்தீவை சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற்ற முடியும் என சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மத ரீதியான, வைத்திய சிகிச்சை ரீதியான, சூழல்சார் மற்றும் கலாசார இயற்கை சுற்றுலாத்தலங்களை வட மாகாணத்தில் அடையாளப்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!