சேவை விலகல்….அரச பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் விலகல்

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13) சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், இன்று சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதிபர் மற்றும் ஆசிரியர் துறையின் சங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இன்று காலை 10 மணியளவில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் யோசனைத் திட்டமானது, அரச தரப்பின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலான விசேட ஆணைக்குழுவிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!