ஜனாதிபதியினால் சபையின் கௌரவம் காப்பாற்றப்பட்டது

பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் நேற்று கூடியபோதும் ஐந்து நிமிடத்தில் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. சபை கூடி ஐந்து நிமிடத்தில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் முடியும்போது 19ஆம் திகதி திங்கட்கிழமை 1 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கமைய நேற்றையதினம் பரபரப்புக்கக்கு மத்தியில் சபை கூடியது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிப்பதுடன் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

அதற்கமைய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்திருப்பதால் கட்சிகள் அதற்குரிய பிரதிநிதிகளின் பெயர்களை செயலாளர் நாயகத்திடம் வழங்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்தார். இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கடந்த 14ஆம் , 15ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் ஏற்பட்ட குழப்பங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். அவருடைய கருத்தைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தெரிவுக்குழு தொடர்பில் கருத்தை முன்வைத்தார். தமது தரப்பை அரசாங்கத்தரப்பாக ஏற்றுக் கொண்டு தெரிவுக்குழுவை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தரப்பு என்ற ரீதியில் தெரிவுக்குழுவில் ஆளும்கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்க வேண்டும் எனக் கோரினார். இதற்கு எதிராக எதிர்த்தரப்பிலிருந்த உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, தம்மை அரசாங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளீர்களா எனக் கேள்வியெழுப்பினார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, கடந்த 14ஆம் திகதி கூடிய பாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

நிறைவேற்றப்பட்டதாக 15ஆம் திகதி சபாநாயகர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்பொழுது எந்தவொரு அரசாங்கமும் அதிகாரத்தில் இல்லை.

எனவே, ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தெரிவுக்குழு உறுப்பினர்களை நியமிக்காது, பாராளுமன்றத்தில் உள்ள நடைமுறைகளுக்கு அமைய தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை 23ஆம் திகதி வௌ்ளிக்கிழமை 10 மணிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். அத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய அமர்வின்போது பார்வையாளர் கலரியில் பொது மக்களை அனுமதிப்பதில்லை என அதிகாரிகள் தீர்மானித்திருந்த நிலையில், பார்வையாளர் கலரியில் ஊடகங்கள் நிறைந்திருந்தன. சபையைக் கூட்டுவதற்கான கோரம் மணி ஒலிக்க, ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அக்ராசனத்தில் அமர்ந்தார். சபையில் ஆளும் கட்சிப் பக்கத்தில் குறைந்தளவான உறுப்பினர்களும், எதிர்க்கட்சி பக்கத்தில் பெருமளவான உறுப்பினர்களும் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

Sharing is caring!