ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோருகிறது ஐ.தே.க

சீன நிறுவனத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி பெற்றிருப்பதாக நிவ் யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக விரைவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இந்த சர்ச்சை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் இரண்டு நாட்களுக்கு விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடைத்தெருக்களிலிலும் கிணற்றடியிலிருந்தும் கருத்து கூறுவதனைவிடுத்து இராஜதந்திர முறையில் பாராளுமன்றத்தில் பதில் வழங்க முன்வர வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்பேதே துஷார இந்துனில் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் அதிக அக்கறை காட்டிய ஜனாதிபதி நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பில் மட்டும் இத்தனை நாள் அமைதி காட்டுவது ஏன் என தனக்கு புரியவில்லையென சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் விரைவில் இதற்குரிய தீர்வு எட்டப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஜனாதிபதி தேர்தலுக்காக செலவிடப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விசேட விவாதமொன்றை ஐ.தே.க கோரியுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்குரிய பதிலை இராஜதந்திர ரீதியில் நாட்டு மக்களுக்கு வழங்காமல் கிணற்றடியிலும் கடைத்தெரிக்களிலிருந்தும் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

கடந்த ஆட்சியின்போது 11 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்ட்டுள்ளனர். மேலும் பலர் கடத்தப்ட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடி நிறைந்த அதே பழைய நிலை மீண்டும் தலைதூக்கப் பார்க்கிறது. நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Sharing is caring!