ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் விசாரணை நாடத்துதல் அவசியம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றனர்

தன்னை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவினருக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. படுகொலை சதி முயற்சி தொடர்பில் விரிவான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையே ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். இந்த சதித்திட்டத்தை இந்திய புலனாய்வுப் பிரிவொன்றுடன் தொடர்புபடுத்தி அவர் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் உள்ளடங்குகிறது. இதன்போது தேசிய பொருளாதாரத்தின் நன்மைக்கு இலங்கை, ஆழ் கடல் துறைமுக முனையம் ஒன்றை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கிக் கூறியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உள்ளூர் மற்றும் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இச்சந்திப்பின் போது இதனுடன் தொடர்பான அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டு இருதரப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய புலனாய்வுப் பிரிவை தொடர்புபடுத்தி வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சும் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள், இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவாறு பலமாகவுள்ளது. என்பதை வலியுறுத்துவதற்கு அமைச்சு விரும்புவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது இவ்விதமிருக்க, நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விடயம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதால் அவரை இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு முகவர் அமைப்பான ‘றோ’வுடன் தொடர்புபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றே ஜனாதிபதி கூறியதாகவும் விளக்கமளித்தார்.

இதன் ஊடாக அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றே ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

‘றோ’ சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கூறவில்லை. ஊடகங்கள் நடக்காத விடயத்தை அறிக்கையிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றபோதும் அதுபற்றிய அறிக்கைகளோ அல்லது விபரங்களோ எதுவும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லையென்ற விடயத்தை ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும், பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபருக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கலந்துரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குரல்கள் உண்மையானவை என அவர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர். அப்படியாயின் ஏன் இன்னமும் பிரதிப் பொலிஸ் மா அதிபரைக் கைதுசெய்யவில்லையென ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பினர்.

ஒலிப்பதிவு உண்மையென்றே அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் கூறியுள்ளனர். அதிலுள்ள விடயம் பற்றி எதுவும் அவர்கள் கூறவில்லை. அதிலுள்ள விடயத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டியுள்ளது என்றார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கும் ஒருவர். அவர் ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றை நடத்துவதாகவும் அதன் பணிப்பாளர் என்றும் ஊடகங்களே அவரைப் பெரிதுபடுத்தியுள்ளன. இதுபோன்று ‘கார்ட்போர்ட்’ வீரர்களை ஊடகங்களே உருவாக்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Sharing is caring!