ஜனாதிபதி தேர்தலில் எக்காரணம் கொண்டும் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்காரணம் கொண்டும் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“பொலனறுவையில் இருந்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்ட நபரின் செயற்பாடுகள் காரணமாக இன்று நாட்டில் பாரிய அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நாட்டில் நடந்த அனைத்திற்கும் ஜனாதிபதி கணக்கு ஒன்றை வைத்துள்ளார். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட நபரினால் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளோம்.
ஆகையினால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்காரணம் கொண்டும் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம்.
எனவே, மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் தமது கரங்களை பலப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.