ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்

தைத் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

மலர்ந்திருக்கும் இந்த தைத்திருநாள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட இலங்கை நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே தனது நம்பிக்கை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன, மத, அடிப்படைவாத சக்திகளை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை வலியுறுத்துவதுடன், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர தமிழ் மக்களுக்கும் உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டி இதயச்சுத்தியுடன் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு, அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலன்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர் செய்ய முடியாமலும் உள்ள மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வௌியிட்டுள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

Sharing is caring!