ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகளும், சகோதரரும் அரசியலில் குதிக்கவுள்ளனர்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகளும், சகோதரரும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ராஜபக்சே தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

‘இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மூத்த மகள் சத்துரிக்கா சிறிசேனா. இவர், தனக்கென சமூக வலைதளங்களில் ஆதரவுத் தளங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதன் ஒரு அங்கமாகவே, ‘ஜனாதிபதித் தாத்தா’ என்ற நூலை வெளியிட்டிருந்தார்’ என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இலங்கையின் பிரபல தொழிலதிபரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் சகோதரருமான டட்லி சிறிசேனா, கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

இதில் அவர் பேசியதாவது;

பணத்தாசையால், அரசியல்வாதிகள் நாட்டை விலை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நான் தலைமை வகித்து களத்தில் குதிக்கப்போகிறேன். நாடானது, ஒன்பது துண்டங்களாகப் பிரிபடப்போகும் அபாயத்தை நான் அறிந்துள்ளேன். அந்த அபாயத்திற்கு எதிராக, உயிர் அர்ப்பணிப்புடன் போராடப்போகிறேன். நான் எதற்கும் பயந்தவன் இல்லை” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து சில மணி நேரத்தில், ஜனாதிபதியின் மூத்த மகள் சத்துரிக்காவும், சகோதரர் டட்லி சிறிசேனாவும் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இது, மஹிந்த ராஜபக்சே தரப்பினரிடையே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனிமைப் படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், அவரது அதிகாரத்தை கட்சிக்குள் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகவும் இந்த அரசியல் பிரவேசங்கள் அமையப்போவதாக கூறப்படுகிறது.

Sharing is caring!