ஜனாதிபதி 67 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  தனது 67 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிறந்த மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பிணைப்பு மிக வலிமையானது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தோபாவெவ மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்தார்.

பாடசாலைக்காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில் அரசயில் செயற்பாட்டில் ஈடுபட்ட அவர், அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.

மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி இளைஞர் அமைப்பின் செயலாளராக 1967ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமனம் பெற்றார்.

1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான மைத்திரிபால சிறிசேன நீர்ப்பாசன அமைச்சராக பொறுப்பேற்றார்.

1997இல் மகாவலி அபிவிருத்தி, பாராளுமன்ற விவகார அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் தெரிவான அவர் 2000ஆம் ஆண்டு கட்சியன் உப தவிசாளராக பொறுப்பேற்றார்.

2001ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குப் பாத்திரமானார்.

2004ஆம் ஆண்டில் பாராளுமன்ற சபை முதல்வராகவும், 2005ஆம் ஆண்டில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிகளை வகித்தார்.

2009ஆம் ஆண்டில் தீவரவாதம் தோற்கடிக்கப்பட்ட காலப்பகுதியில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

2010ஆம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர் 2015 ஜனவரி எட்டாம் திகதி விசேட வெற்றியைப் பெற்று நாட்டின் ஆறாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

19ஆவது அரசியலமைப்பு சீர் திருத்தமூடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியமை, சுயாதீன ஆணைக்குழுவை வலிமைப்படுத்தியமை, தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை உள்ளிட்ட ஜனநாயக விடயங்களை வலிமைப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் ஜனாதிபதி செயற்பட்டார்.

மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் கடந்த மூன்றரை வருடங்களில் மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் சொந்த செலவில், கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திலுள்ள போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தங்க வேலி இன்று திறந்துவைக்கப்பட்டது.

சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து தமது பிறந்த தினத்தை ஜனாதிபதி கொண்டாடினார்.

Sharing is caring!