தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மௌலவிக்காக பிணை வழங்கியுள்ளவர் சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ஆவார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஏ.ஜே. எம். சஹ்லான் எனும் மௌலவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்துள்ளார்.

இதன்போது, வேறு ஒரு தேவையின் நிமித்தம் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற குறித்த தேரர் சம்பந்தப்பட்ட மௌலவி தொடர்பில் தகவல் அறிந்ததும், அவருக்காக பிணை வழங்குமாறு தான் முன்னின்றுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், தேரரின் வேண்டுகோளையடுத்து மௌலவிக்கு பிணை வழங்க தீர்மானித்துள்ளார். மௌலவிக்காக பிணை வழங்க யாரும் முன்வராமையினால் தேரர் முன்வந்து பிணை வழங்கியள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவரின் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு முன்வைக்காமல், சமாதானக் குழு முன்னிலையில் பேசித் தீர்மானிக்குமாறும் தேரர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதத் தலைவர் ஒருவர் அகௌரவப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக தான் அவருக்காக பிணை வழங்க முன்வந்ததாக விகாராதிபதி தெரிவித்துள்ளதாக இன்றைய சகோதர மொழி தேசிய நாளிதழொன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

Sharing is caring!