தடை உத்தரவை மீறிய மஹிந்த ராஜபக்ஸ
அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக இன்று (04) உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவுடன் தம்மால் இணங்கமுடியாது என நேற்றிரவு வெளியிட்ட விசேட அறிக்கையூடாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக இன்று உயர்நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பமாகும் முதல் மணித்தியாலத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு தொடர்பிலான பொருட்கோடல் வழங்குவது மற்றும் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் மீயுயர் அதிகாரம் அரசியலமைப்பிற்கமைய உயர்நீதிமன்றத்திற்கே உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம், பொதுத் தேர்தலூடாக மக்களின் கருத்தினை கேட்டறிவதற்கான திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தது.