தன்னையும், தனது சகோதரரையும் கொலை செய்ய முயற்சித்த விவகாரம் ஜனாதிபதிக்கு தெரியும்
தன்னையும், தனது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்த விவகாரம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல விடயங்கள் தெரிந்திருக்கும்.
இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் முன்னாள் அரச தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் விவகாரம், கொலைச் சதி குறித்து அரசு மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அரசு எங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு எதனையும் செய்யாது. கொலைச் சதி முயற்சி குறித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு பல விடயங்கள் தெரிந்திருக்கும் – என்றார்.
மேலும் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.