தமிழர் போராட்டத்திற்கே களங்கம்
ஜனநாயக விரோத அரசில் வியாழேந்திரன் பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமை, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இவ் வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மைத்திரிபாலவின் காட்டிக்கொடுப்பு மிகவும் கீழ்த்தரமானது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே 2015ஆம் ஆண்டு அவர் அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்காகவே நாட்டின் ஒட்டுமொத்த சிவில் அமைப்புகளும் இணைந்து செயற்பட்டிருந்தோம்.
சர்வாதிகாரத்தை ஒழிப்பதற்காக கொண்டுவந்தவரே இன்று சர்வாதிகாரியிடம் நாட்டை ஒப்படைத்துள்ளார். பன்னாட்டு ரீதியில் இலங்கைக்குப் பாரதூரமான நெருக்கடிகள் ஏற்படும் என்பதை அறியாது அவர் நடந்து கொண்டுள்ளமையானது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் இவர்களின் ஜனநாயக விரோதச் செயற்பாட்டுக்கு ஆதரவளித்துள்ளார். மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியின் காரணமாகவே கடந்த காலங்களில் பாரதூரமான மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன.
இவையனைத்தையும் அறிந்து தேசியத்துக்காக அரசியலை முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒருவர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியமை உண்மையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும் – என்றார்.