தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை வௌியிடவில்லை.

பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் பின்னணியில் சிறுபான்மைக் கட்சிகள் பல தமது ஆதரவை வௌிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை வௌியிடவில்லை.

இந்நிலையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் என்பனவும் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிப்பதாக இன்று (27) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தனது ஆதரவை இதுவரை வௌியிடாத நிலையில், நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விதத்தில் இருக்கும் எவர் பிரதமராக வந்தாலும் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக முன்னணி என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவிற்கு ஆரவளிப்பதாக அறிவித்துள்ளன.

பெரும்பான்மை கட்சிகளைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளன.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னணியில், பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நண்பகல் பணிப்புரை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Sharing is caring!