தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு உரிய பிரிவுகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, வழக்கு தாக்கல் செய்யப்படாத தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் ரோஹன லக்ஸ்மன் பியதாச கூறினார்.

இதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மத ஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளையும் விடுவிப்பது தொடர்பில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி யோசனை முன்வைத்தததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் எதிர்வரும் ஜனவரி மாத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என்பதை கட்சியென்ற ரீதியில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாளிமார் சம்மேளனத்திற்கு இதுகுறித்து அழுத்தம் விடுப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!