தமிழ் பத்திரிகையைக் கொளுத்திய முஸ்லிம்கள்!

யாழில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு, அப்பத்திரிகையின் மீள் பதிப்பு ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது.

பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று, குறித்த தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி பத்திரிக்கையின் பெருப்பிக்கப்பட்ட மீள் பதிப்பை எரித்துள்ளது.

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோது, சபையில் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின், உரையாற்றியிருந்தார்.

அந்த உரையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், ”யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தீர்மானம் சரியானது என மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்” என்ற செய்தியை யாழில் இருந்து வெளியாகும் அந்த தமிழ் பத்திரிகை தனது முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

நேற்று காலை வெளியான தமிழ் பத்திரிகையின் முன்பக்க செய்தியை அவதானித்த வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்கள் குழு ஒன்று துணிச்சலாக யாழ் நகரின் வீதியில் இறங்கி அவ்வாறு செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு எதிராக கோசம் எழுப்பியதுடன், பத்திரிகையின் பிரதியையும் எரித்துள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Sharing is caring!