தற்கொலை – மயிரிழையில் காப்பாற்றப்பட்ட சம்பவம்

ஓடும் தொடருந்திலிருந்து தற்கொலை செய்வதற்காகக் குதிக்க முனைந்த பெண் ஒருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாத்தறைக்குச் செல்லும் தொடருந்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி தொடருந்து ஒன்று மிகுந்த சன நெரிசலில் சென்றுகொண்டிருந்தது. காலி தொடருந்து நிலையத்தைக் கடந்ததும் சன நெரிசல் கணிசமாகக் குறைந்தது.

குறித்த தொடருந்தின் மூன்றாம் வகுப்பு ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அடிக்கடி கதவருகில் செல்வதும் பின்னர் உள்ளே வருவதுமாக இருந்துள்ளார்.

இதனை நீண்ட நேரமாக அவதானித்துக்கொண்டிருந்த சக பயணிகள் பெண்ணின் நடமாட்டம் குறித்துச் சந்தேகப்பட்டனர்.

இந்த நிலையில் தொலைபேசியில் யாருக்கோ அழைப்பெடுத்த குறித்த பெண், மிகவும் சோகமாக அழுதபடி கதைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து திடீரென்று எழுந்த அவர் தொடருந்து வாசல் நோக்கி ஓடியுள்ளார்.

வாசலை நெருங்கியதும் குதிப்பதற்காக முயற்சித்தபோது அவரைப் பின்தொடர்ந்துவந்த சக பயணி ஒருவர் பாய்ந்து சென்று அவரது கூந்தல் முடியைப் பிடித்து பலமாக உள்ளே இழுத்துவிட்டார்.

இந்தன்பின்னர் கதறிக் கதறி அழுத அந்தப் பெண்ணிடம் காரணம் கேட்டபோது, தான் காதலில் தோல்வியடைந்துவிட்டதாகவும் தொடர்ந்தும் வாழ விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணின் பெற்றோருக்கு தொடர்பெடுத்த சக பயணிகள் அவரைப் பத்திரமாக பெற்றோரிடம் சேர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!