தலைவர் A.L.M. அதாவுல்லா கடிதமொன்றை அனுப்பியுள்ளார்
தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்மொழியப்பட்ட 19 ஆவது திருத்தத்தில், அவரின் அரசியல் எதிரிகளை பலமிழக்கச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அக்கடிதத்தில் அதாவுல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டு அவசர அவசரமாக இவை நிறைவேற்றப்பட்டன என்பதற்கு 19ஆவது திருத்தச் சட்டம் இன்று சான்று பகர்வதாக தேசிய காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறான முன்னைய நிலைமைக்கு அரசியலமைப்பு மீட்கப்பட வேண்டுமென அதாவுல்லா வலியுறுத்தியுள்ளார்.
19ஆவது திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பிரிவுகள் இன்று இயங்கவிடப்பட வேண்டியது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு அத்தியாவசியமானது என தேசிய காங்கிரஸ் கருதுகிறது.
சர்வஜன வாக்கெடுப்பினூடாக அரசியலமைப்பை திருத்துவதே உகந்தது எனவும் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.