திடீர் கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தேசிய மகாவலி அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவெலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டீ.எம்.எஸ் திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடினார்.

மகாவெலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மொரகஹகந்த – களுகங்களை நீர்ப்பாசனத் திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் நடவடிக்கை முன்னேற்றமடைந்துள்ளதாக, மகாவெலி அதிகார சபையின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதமாகும்போது, நீர்த்தேக்கத்தில் முழுமையாக நீர் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

லக்கல புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கையின் முதலாவது சுற்றாடல் கைத்தொழில் பூங்கா, விசேட சுற்றாடல் வலயத் திட்டம் மற்றும் விவசாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மகாவெலி வலயங்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தினார்.

இதனையடுத்து, கொழும்பு – காலி வீதியிலுள்ள தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையில் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு வருகைதரும் மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி சிறந்த மக்கள் சேவையை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, அதிகார சபையின் வரவேற்பறைக்குச் சென்ற ஜனாதிபதி அதன் நடவடிக்கைகளையும் கண்காணித்தார்.

அலுவலகத்திற்கு வருகைதரும் அதிதிகளுக்கான இடத்தின் வசதிகளையும் ஜனாதிபதி கண்காணித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!