தினம் தினம் மக்களுக்கு வந்து சேரும் மகிழ்ச்சியான செய்திகள்!

பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (15) பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

நிர்மாணப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பதற்காகவே அமைச்சர் இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பலாவி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எனவே ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாணப் பணிகளை முடிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் நூற்றுக்கு 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அதேபோன்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் 55 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என அழைக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் எமக்கு இப்போது தேவையில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த காணிகள் மக்கள் நெடுங்காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த பிரதேசங்கள். ஆகவே இது இராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் அல்ல.

இந்நிலையில், பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் எமக்கு இப்போது தேவையில்லை என்று பலரால் கூறப்படுகின்றது.

எனவே இராணுவத்துக்கு ஆயிரம் ஏக்கர், விமான நிலையத்துக்கு ஆயிரம் ஏக்கர் என்று மக்களின் காணிகளை சுவீகரிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!