துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வழக்கு மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பு
நீதிபதி இளஞ்செழியனின் பொலிஸ் பாதுகாப்புப் பணியாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வழக்கில், எதிரிகளின் விளக்கமறியலை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கோரியுள்ளது.
யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி அ.பிரேமசங்கர் முன்னி லையில், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் இந்த மனுவை நேற்றுத் தாக்கல் செய்தார்.
கொலைக் குற்றச்சாட்டுள்ள சந்தேகநபர்களை ஒரு வருடத்துக்கு விளக்கமறியலில் வைக்க சட்டம் வரையறை செய்யும் அதேவேளை, தேவையேற்படின் மேலும் ஒரு வருடத்துக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்க மேல்நீதிமன்றில் சட்டமா அதிபர் கோர முடியும்.இந்த வழக்கில் புலன்விசாரணைகள் நிறைவடையவில்லை. சந்தேகநபர்களைப் பிணையில் விடுவித்தால் அவர்கள் தலைமறைவாகக்கூடும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் வரலாம்.
சந்தேகநர்களுக்கு மேலும் ஒரு வருடம் விளக்கமறியலை நீடிக்கவேண்டும் என்று அரசசட்டவாதி மனுவில் கோரினார்.
அதைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் முதல் அறிக்கை உள்ளிட்ட வழக்கின் நிலை பற்றி மன்றுக்கு அறிக்கையிடுமாறு கூறி மனு மீதான கட்டளையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் கடந்த வருடம் இதே மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒரு பொலிஸ் பணியாளர் கொல்லப்பட்டார். மற்றொரு பொலிஸ் பணியாளர் படுகாயமடைந்தார். இந்தக் குற்றச்சாட்டில் சூடு நடத்தப்பட்ட மறுநாள் இருவரும் அதற்கும் மறுநாள் ஒருவருமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.