தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின் உருவச்சிலை

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின் உருவச்சிலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  1 0 ஆம் திகதி திறந்து வைத்தார்.

சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்களுக்கு அதியுயர் கௌரவத்தை அளிக்கும்வகையில் ஜனாதிபதி அலுவலகத்தினதும் அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தினதும் நெறிப்படுத்தலில் இந்த உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வியின் தந்தையென புகழாரம் சூட்டப்பட்டுள்ள சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்கள் நம் நாட்டின் கல்வித்துறைக்கு ஈடிணையற்ற அரும்பணியாற்றியுள்ளார்.

ஏகாதிபத்தியவாதிகளுடன் இணைந்து வரப்பிரசாதங்களை அனுபவித்த பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை பணயம் வைத்தே கன்னங்கரா அவர்கள் நம் நாட்டிற்கு சகல வெற்றிகளையும் பெற்றுத்தந்தார்.

அப்போதிருந்த பௌத்த தேரர்களும், பௌத்த தலைவர்களும், மனித நேயமிக்கவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்ததுடன், தாமதமின்றி விடுதலை பெற வேண்டிய எமது தேசம் மீண்டும் பிறரிடம் கையேந்தாது, பிறரை சார்ந்திருக்காத வகையில் அபிமானத்துடன் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அதனை கல்வியினூடாகவே நிறைவேற்ற முடியும் எனவும் அவர் உறுதியாக நம்பினார்.

அதன் பெறுபேறாகவே இலவச கல்விக்கொள்கையும் மத்திய கல்லூரி பற்றிய எண்ணக்கருவும் கிடைக்கப்பெற்றது. விடுதி வசதியுடன் கூடிய மத்திய கல்லூரிகளை உருவாக்கி, கிராமங்களை மையமாகக்கொண்ட பல்கலைக்கழகங்களாக அவற்றை மாற்றியமைக்க கன்னங்கரா அவர்களே முன்னோடியாக செயற்பட்டார். ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் குறைந்தது ஒரு மத்திய கல்லூரி என்றவகையில் விடுதிகள், தொழில்நுட்ப பயிற்சி வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் நூலகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட உயர் கல்வியை வழங்கும் மத்திய கல்லூரிகளை அமைக்க அவரே முன்னோடியாக செயற்பட்டார்.

அதேபோன்று திறமையான அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்த அவர், திறமையான ஆசிரியர்களை இனங்கண்டு நியமனம் செய்தார். சிறந்த அடிப்படைக் கல்வி வசதிகளை ஏற்படுத்தி திறமையான மாணவர்களை மத்திய கல்லூரிகளுக்கு அனுப்பிவைத்தார். அதனூடாக நாடு முழுவதும் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தினார். வரையறுக்கப்பட்ட வசதி வாய்ப்புகளைக் கொண்டு உச்சப்பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மத்திய கல்லூரி எண்ணக்கருவினை விரிவுபடுத்தவும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து, சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்களின் உருவச்சிலையை திறந்துவைத்த ஜனாதிபதி உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தர்மசேன கஹதவ வரவேற்புரை ஆற்றியதுடன், அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் நிகழ்வில் உரையாற்றினார். அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி ஏ.பி.ஏ.குணசேகர கருத்து தெரிவித்தார்.

சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்கர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sharing is caring!