தொடரும் தொழிற்சங்க போராட்டம்
சுங்கப் பணிப்பாளர் நாயகத்தை இடமாற்றுவது குறித்த அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இன்றைய தினத்திற்குள் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுங்க அலுவலக அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தற்போது முன்னெடுத்துவரும் சட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்தை பணிப்பகிஷ்கரிப்பாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் செயலாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, சுங்கப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட பி.எஸ்.எம். சார்ள்ஸை நிதி அமைச்சின் வருமான கண்காணிப்பு பிரிவிற்கு மாற்றுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனி ஒருவரால் மாற்ற இயலாது என நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள சுங்க அலுவலக அதிகாரிகளின் சங்கம், மீண்டும் அமைச்சரவை கூடவுள்ளதால், இழைக்கப்பட்ட தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து அரசாங்கத் தரப்பினரால் இதுவரை எந்தவொரு கருத்தும் முன்வைக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது தொழிற்சங்க நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் 3 அல்லது 4 பில்லியன் வருமானம் ஈட்டப்படுகின்றபோதிலும், 2,000 கொள்கலன்களை சோதனையிடும் நடவடிக்கைகள், தற்போது 200 கொள்கலன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ள இறக்குமதியாளர்கள், வரி செலுத்துவதையும் தவிர்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சகல மொத்த வியாபார நிலையங்களையும் இன்று மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அத்தியவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், துறைமுகத்திலேயே தேங்கியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் அவற்றை விடுவிப்பதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதற்கு நேரிடும் எனவும் சங்கத்தின் ஆலோசகர் சி.எம். அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.