தொடரும் போராட்டம்

நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டங்களில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், சில பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு சென்றிருந்தனர்.

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கம்பளையிலுள்ள அனைத்து பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கம்பளை – புப்புரஸ்ஸ மேல் பிரிவு தோட்ட மக்களும், புப்புரஸ்ஸ – மணிக்கட்டி, சூட்டியங்காடு தோட்ட மக்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புசல்லாவை – ஸ்டலன் பேன்க் தோட்டம் மற்றும் டெல்டா தோட்டத்தைச் சேர்ந்த மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேகாலை மாவட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ருவன்வெல்ல – முரளிஓயா, டெஸ்டபோர்ட் , தனிக்கிராப் மற்றும் வின்சீட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

நிட்டம்புவ – ருவன்வெல்ல பிரதான வீதியில் முரளிஓயா சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, தெஹியோவிட்ட சம்புபமல்கந்த தோட்டத்தொழிலாளர்களும் மாயிம்கந்த, உடபாக, குளூன்ஸ் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மாத்தளை – கந்தேநுவர மற்றும் மில்லவான தோட்ட மக்கள் இன்று வழமை போன்று தொழிலுக்கு சென்றிருந்தனர்.

தெனியாய – மதுகோவை சந்தியில் இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி இவர்கள் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நுவரெலியா – மட்டுகல்ல தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Sharing is caring!