தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அவசியம்…வடக்கு ஆளுனர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுவது அவசியம் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

மலையக சமூகம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதாகவும் 1000 ரூபா என்பது மிகக் குறைந்த அளவிலான சம்பளம் எனவும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பை வழங்கும் அளவிற்கு இலாபம் பெறவில்லை என கூறும் கம்பெனிகள் இழுத்து மூடிவிட்டு காணிகளை மக்களுக்கு கொடுத்து விட்டு செல்ல முடியும் எனவும் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இப்பிரச்சினை வட மாகாணத்துடன் நேரடியாகத் தொடர்புபடாதமையினால், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக் குறைவு என சுட்டிக்காட்டிய வட மாகாண ஆளுநர், தனிப்பட்ட ரீதியாக இப்பிரச்சினையைக் கையிலெடுக்க எண்ணியுள்ளதாகவும் கூறினார்.

இது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பதால், வட மாகாணத்திலிருந்து 10,000 கையெழுத்துகளைப் பெற எண்ணியுள்ளதாகவும் இன்று முதல் அந்நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

வட மாகாண மக்கள் மலையக மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் நோக்கில், பொது நாட்களில் கறுப்பு ஆடைகளை அணியவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

Sharing is caring!