நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி மற்றும் அது தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பிற்கு முரணானது என 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தின் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வழமையான அறிவித்தல்களின் பின்னர் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி சபை நடவடிக்கைகளை தொடர்வதற்கான யோசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

அந்த யோசனை பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரேரணை தொடர்பில் இன்றைய தினமே கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்போது, எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பொன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மையினர் வாக்களித்ததுடன், அதற்கமைவாக நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்துள்ளார்.

இதன்பின்னர் நாளை காலை 10 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு சபை முதல்வர் லக்க்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!