நவம்பர் 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் நாம் எமது வெற்றியை மீண்டும் உறுதி செய்வோம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து சதிமுயற்சியின் மூலம் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை ஓரிரு நாட்களுக்குள் ஐக்கிய தேசியமுன்னணி கைப்பற்றும் என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிறேமதாச சூளுரைத்திருக்கின்றார்.

நாடாளுமன்றில் பெரும்பாண்மையினை நிரூபிப்பதற்குத்தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மைத்ரி –மஹிந்த தரப்பின் முக்கிய தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்துவரும் நிலையிலேயே ஐக்கியதேசியக் கட்சியின் துணைத் தலைவர் இந்த தகவலை தெரிவித்திருக்கின்றார்.

தென்பகுதி பிரதேசமான களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிறேமதாச….

“இதுவரை நாடாளுமன்றில் மூன்று முறை எமது பெரும்பாண்மையினை நிரூபித்துள்ளோம். இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பொரும்பாண்மையினை நிரூபித்ததோடு, மூன்றாவதுமுறையாக தெரிவுக் குழுவின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நடாத்தியபோது 121 எனும் பெரும்பாண்மை வாக்குகளை வழங்கியிருந்தோம். அதே போல மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களது சட்டவிரோத அரசாங்கத்திற்கு பாடம் கற்பிப்பதற்கான தீர்மானமிக்க இரண்டு தினங்கள் இன்னும் எஞ்சியுள்ளன.

நவம்பர் 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் நாம் எமது வெற்றியை மீண்டும் உறுதி செய்வோம். பிரதமர் என கூறிக்கொள்ளும் மஹிந்த தொடர்ந்தும் பதவி வகித்துவருவதை தடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் பிரேரணை 29ஆம் திகதிக்கு நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதனை பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெறச் செய்வோம்.

அதனையடுத்து நவம்பர் 30ஆம் திகதி நடைமுறையிலுள்ள இந்த சட்டவிரோத அரசாங்கமாகவும், முதல்முறையாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட நபர்கள் ஆட்சியிலிருந்துவெளியேற்றப்பட்ட அரசாங்கமாக உலக சாதனை படைக்கப் போகின்றது. இதற்கமைய எமது வெற்றியினை ஜனநாயக வழியில் உறுதி செய்து நாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்” என்றார் சஜித்.

Sharing is caring!