நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது

பல்வேறுப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை)  மீண்டும் கூடவுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்றைய அமர்வின் போது  சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது .

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 14, 15, 16 ஆகிய திகதிகளில் கூடிய போதிலும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்ப நிலைகளை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கடந்த 19 ஆம் திகதி நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. ஆனால்இ நாடாளுமன்றம் கூடிய சிறிது நேரத்திலேயே சபை நடவடிக்கைகள் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 23ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டு தெரிவுக்குழு உறுப்பினர்கள் தொடர்பான அறிவிப்பு சபாநாயகரினால் வெளியிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தொிவித்து ஆளுந்தரப்பினரான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

அதன் பின்னர் 27 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்பே நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு கடந்த அமர்வின் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து நாடாளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!