நாடு முழுவதும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை அதிகரித்துக் காணப்படும்

நாடு முழுவதும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்குக் கரையோரப் பிராந்தியத்தின் பல இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

மத்திய, சபரகமுவ, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்தோடு, கடும் காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், நாட்டின் கிழக்குக் கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் தென் மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!